Thursday, July 9, 2020

பாதசாரி கவிதைகள்




வழியில்
ஒன்று மட்டும் புரிகிறது
புறப்படாமலேயே போய்க் கொண்டிருக்கிறேன்.



**************************************************



வெள்ளையை விளக்குவதற்கு
கருப்பு தேவைப்படுகிறது...


***********************************************


தடாகத்தில் தாமரை மலர்கள்
தாகமாய் விழுங்கியது
சூரியனை!



***********************************************


இரை தேட
சென்றிருந்த ஒருபொழுதில்
கலையப்பட்டு இருந்தது அதன் வீடு,
அமைதியில் பயங்கரமான
கூக்குரல் அலறிற்று



***************************************************


வரிகளின் வலியும்
வேதனையும் வடித்தவனுக்கே;
விலைப்பேசிக் கொண்டிருந்தார்கள்
தரகர்கள்!


*********************************************


ஊரை விட்டு அகலும் பயணத்தில்
ஊரை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தது
மனதின் பயணம்!!

திருமேனி கவிதைகள்




பூ பூத்தப்பின் தான்
காம்புக்கு வருகிறது பேர்.



**************************************


உன்னைப் பார்த்த
ஜன்னலை
தினமும் பார்க்கிறேன்
ஜன்னல்
அங்கேயே இருக்கிறது



***************************************


சொட்டச் சொட்ட
போய்க்கொண்டிருந்தாள்
மழையை பார்க்கவில்லை
நான்
அப்போது நல்ல மழை





என் வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை


என் வீட்டில் நல்ல இருட்டு
எதிர் வீட்டு வெளிச்சத்தில் எழுதுகிறேன் கவிதை
என் வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையில்லை எனக்கு- எதிர்
வீட்டு விளக்குக்கு எண்ணை இல்லை
என்கிற கவலையே எனக்கு!
- ஜெயகாந்தன்


************************************

ஒன்றுமில்லை என்கின்றீர்

ஒன்றுமில்லை தானா?
இன்றில்லை என்கின்றீர்
என்றுமில்லை தானா?

********************************************


எதிர் வீட்டுச் சன்னலை
எவரோ திறக்க
என் வீட்டில் வெளிச்சம் !

Sunday, March 7, 2010

நட்பு

நட்பின் பிரிவு

அது ஓர் ஆழமான பிரியம்,
அதுவே ஆன்மாவை நிறைவில் நீராட வைக்கிறது...

நீலக்கடல் கரையில்
அமர்ந்து இருக்கின்ற நேரங்களில்
அலைகள் பாடும் சங்கீதத்தின் வசீகரம்...

நடுநிசியில் வீதியில்
நடக்கையில் மென்மையான காற்றில்
அசைப் போடப்படும் நிமிடங்கள்;

இரவின்
நிலவின்
பூக்களின்
மரங்களின் மௌனம்
எல்லாவற்றையும் விட அழகானது!

நிலா ஒளியாலும்
நட்சத்திர கூட்டத்தாலும் நிரம்பிக் கிடக்கும்
இந்த வானில் - நீயே அதிகம் எனக்கு பிரதிபளிக்கின்றாய்!


கண்களைத் துடைத்துக் கொண்டு
புகைப்படத்தை
நீண்ட நேரம் பார்த்தப் பின்பு
மீண்டும் மீண்டும் புன்னகைத்தேன்...

என் கண்கள்
எப்போதும் எனக்கே உண்மையாக இருக்கவில்லை,
என் மனமோ என்னை பற்றி சிந்திப்பதே இல்லை;
நீயோ,
வந்து விட்டு செல்கிறாய்- ஒரு
நினைவுக்கும் இன்னொரு நினைவுக்கும்
இடையே மனம் ஓடிக் கொண்டே இருக்கின்றது...

உன்
வருகையை எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன்...
நீ சென்றது இந்த இந்த நிமிடம் தான் என்பதை மறந்து...

Thursday, January 7, 2010

கண்ணீரில் வாழ்கிறேன்
கனவாகிப் போனவளே உனைநினைத்து
கண்ணீரில் வாழ்கிறேன்!

மரணத்தில் உனை மரகலாமென நினைத்தேன்
என்னைக் கொள்ள எனக்குத் துணிவில்லை,
மதுவில் மறக்கலாமென நினைத்தேன்
அது அலைகளாய் உன் நினைவுகளை எழுப்பியது!

தூக்கத்தில் மறக்கலாமென நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்த காலங்கள் கனவுகளாய் வருகின்றது!

தோற்றாலும் விரும்பப்படும் உனை மறப்பதெப்படி?

சிலுவைகளை
உன் நினைவுகளை சுமந்துக் கொண்டு
உயிரோடு இறந்துக் கொண்டிருக்கின்றேன்- நான்!


நீ மறந்து போன
ஞாபகம் நான்!

Monday, November 16, 2009

பட்டினத்தார்
பிறந்தன இறக்கும்,
இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும்,
மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும்,
சிறுத்தன பேருக்கும்;
உணர்ந்தன மறக்கும்,
மறந்தனவுனரும்;
புணர்ந்தன பிரியும்,
பிரிந்தன புணரும்...

௨)
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை விட்டு மனம்,
திடப்படுமோ? நினருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர்வாயிளிர் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்கனாதனே!

3)
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!

Friday, November 13, 2009

அவள்

வேறென்ன
வேண்டுமெனக்கு?
ஒவ்வொரு
நாளும்
இதே நேரம்
இதே மயக்கம்
ஒவ்வொருவிதமாய்!

காற்றிலே
படபடக்கும்
கண்ணாடிக்கூந்தலோடு
அளவளாவி
மகிழும்
நீலத்தாவணியும்,
கொலுசினிசைக்கேற்ப
நர்த்தனமாடும்
பாவாடைப்பூக்களுமாய்
அவளின்
ஈடில்லா
அழகில்
பொறாமை
கொண்ட
பிறை
நிலவானது
தோல்வி
முகங்காட்டமறுத்து
இருளுக்குள்
புதையுண்டதே
தேய்பிறைக்கு அடுத்து
வரும்
அமாவாசை
ஆகும்...